கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனின் இரண்டாவது வெற்றியையும் பெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் அபார ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்திருந்தார். அவரைத் தவிர்த்து கேமரூன் க்ரீன் 33 ரன்களை எடுத்தார்.
Trending
இதையடுத்து விளையாடிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 47 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களையும், பில் சால்ட் 30 ரன்களையும் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களை எடுத்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி 4 சிக்சர்களை அடித்ததன் மூலம் கிறிஸ் கெயில் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். முன்னதாக கிறிஸ் கெயில் 239 சிக்சர்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், விராட் கோலி 241 சிக்சர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள்
- விராட் கோலி - 241 சிக்சர்கள்
- கிறிஸ் கெயில் - 239 சிக்சர்கள்
- ஏபிடி வில்லியர் - 238 சிக்சர்கள்
- கிளென் மேக்ஸ்வெல் - 67 சிக்சர்கள்
- ஃபாஃப் டூ பிளெசிஸ் - 53 சிக்சர்கள்
அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் வரிசையிலும் 241 சிக்சர்களை அடித்து விராட் கோலி 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக சிஎஸ்கே அணியின் எம் எஸ் தோனி 239 சிக்சர்களுடன் 4ஆம் இடத்தில் இருந்த நிலையில், அவரை விராட் கோலி பின்னுக்குத் தள்ளியுள்ளார். இப்பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்சர்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 261 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும், 251 சிக்சர்களுடன் ஏபிடி வில்லியர்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள்
- கிறிஸ் கெயில் - 357 சிக்சர்கள்
- ரோஹித் சர்மா - 261 சிக்சர்கள்
- ஏபி டி வில்லியர்ஸ் - 251 சிக்சர்கள்
- விராட் கோலி - 241 சிக்சர்கள்
- எம் எஸ் தோனி - 239 சிக்சர்கள்
Win Big, Make Your Cricket Tales Now