ஐபிஎல் 2025: பேட்டர்கள் சொதப்பல்; சிஎஸ்கேவை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபிரேசர் மெக்குர்க் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் போரேல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
Trending
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபிஷேக் போரேல் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேப்டன் அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடும் முனைப்பில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடி வந்த சமீர் ரிஸ்வி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் கேஎல் ராகுலுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களைச் சேர்த்த கையோடு கேஎல் ராகுல் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த அஷுதோஷ் சர்மாவும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். இறுதிவரை களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களைச் சேர்க்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் 5 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய விஜய் சங்கர் ஒருபக்கம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுபக்கம் டெவான் கான்வே 13 ரன்களிலும், அதிரடி வீரர் ஷிவம் தூபே 18 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து விஜய் சங்கருடன் இணைந்த மகேந்திர சிங் தோனியும் சிங்கிள்களை மட்டுமே எடுக்க சென்னை அணியின் தோல்வியும் உறுதியானது. அதன்பின் பொறுமையாக விளையாடி வந்த விஜய் சங்கர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஜய் சங்கர் 53 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 69 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களையும் சேர்த்திருந்த நிலையிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே எடுத்தது.
Also Read: Funding To Save Test Cricket
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க்,முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now