
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபிரேசர் மெக்குர்க் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் போரேல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபிஷேக் போரேல் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேப்டன் அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடும் முனைப்பில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடி வந்த சமீர் ரிஸ்வி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.