
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மாற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். பின்னர் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களில் சூர்யகுமார் யாதவும், 9 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 81 ரன்களில் ரோஹித் சர்மாவும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மாவும் 25 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.