
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு முட்டுக்கட்டை போடுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இப்போட்டியை எவ்வாறு அணுகுவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.