ஐபிஎல் 2025: கேகேஆரை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 39ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குயின்டன் டி காக் நீக்கப்பட்டு ரஹ்மனுல்லா குர்பாஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை வழக்கம் போல் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.
Also Read
இருவரும் பொறுப்புடன் விளையாடி தங்களுடைய அரைசதங்களை பூர்த்தி செய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லரும் அதிரடியாக விளையாட ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 60 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 90 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ராகுல் திவேத்தியாவும் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 8 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும், ஷாரூக் கான் 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்துள்ளது. கேகேஆர் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதுர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சுனில் நரைனுடன் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்த கையோடு நடையைக் கட்ட அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் 14 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஜிங்கியா ரஹானே தனது அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில், 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 50 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 21 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ரமந்தீப் சிங் ஒரு ரன்னிலும், மொயீன் அலி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப கேகேஆர் அணியின் தோல்வியும் உறுதியானது.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் ரிங்கு சிங் 17 ரன்னில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 ரன்களையும் சேர்த்த நிலையிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் ரஷித் கான், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் தொடர்ந்து வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now