ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் ம்ற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவும் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த் வில் ஜேக்ஸ் - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடி வந்த வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த வில் ஜேக்ஸும் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 53 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் தீர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்கா, இறுதியில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஷ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ரஷித் கான், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஜெரால்ட் கோட்ஸி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் மற்றும் ஜோஷ் பட்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழ்ப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஜோஸ் பட்லர் 30 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ஷுப்மன் கில் 43 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த ரூதர்ஃபோர்டும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கிய ஷாரூக் கான் 6 ரன்களுக்கும், ரஷித் கான் 2 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பும் கேள்விக்குறியானது. மேற்கொண்டு மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டியும் தடைபட்டது.
இறுதியில் இப்போட்டியில் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. மும்பை தரப்பில் கடைசி ஓவரை தீபக் சஹார் வீசிய நிலையில் ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் திவேத்தியா பவுண்டரி அடித்து அழுத்தத்தை அதிகரித்தார். அதன்பின் இரண்டாவது பந்தில் திவேத்தியா சிங்கிள் எடுக்க, மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஜெரால்ட் கோட்ஸி லாங் ஆஃப் திசையில் அபாரமான சிக்ஸரை அடித்து அசத்தியதுடன் குஜராத் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார்.
Also Read: LIVE Cricket Score
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் திவேத்தியா 11 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தானர். இதன்மூலம் குஜராத் டைட்டான்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now