
அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 44 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களையும், நமன்திர் 27 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கும், ஜோஷ் இங்கில் 38, நெஹால் வதேரா 48 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அதிரடியைக் கைவிடாத ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.