ஐபிஎல் 2025: கருண் நாயர் அதிரடி வீண்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தானர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read
அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதேசமயம் திலக் வர்மாவுடன் இணைந்த நமன் திரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த திலக் வர்மா 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நமன் தீர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் விப்ராஜ் நிகாம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கருண் நாயர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதிலும் குறிப்பாக மும்பை அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களான டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரது பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
இதன்மூலம் இன்றைய ஆட்டத்தில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கருண் நாயர் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டினார். இதன்மூலம் இரண்டாவது விக்கெட்டிற்கு கருண் நாயர் மற்றும் அபிஷேக் போரல் இருவரும் இணைந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் போரல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுறையில் அபாரமாக விளையாடி வந்த கருண் நாயர் 12 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் அக்ஸர் படேல் 9 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்னிலும், அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் 15 ரன்னிலும், விப்ராஜ் நிகாம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது பும்ரா 19ஆவது ஓவரை வீசிய நிலையில், அந்த ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய அஷுதோஷ் சர்மா 16 ரன்களைச் சேர்த்த கையோடு ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி அடுத்தடுத்த பந்துகளில் குல்தீப் யாதவ், மோஹித் சர்மா உள்ளிட்டோரும் ரன் அவுட்டாகிட, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கரண் சர்மா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now