
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் பில் சால்ட் 37 ரன்களையும், விராட் கோலி 22 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில், கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 93 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.