
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் தொடங்கிவுள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இதில் எந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ற வகையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும்.
இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ் ஆகியோர் சர்வதேச போட்டிகள் காரணமாக பிளே ஆஃப் சுற்றில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.