
குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலின் 2ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் 9ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரன்களை வாரி வழங்கியது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் அவர் 3 ஓவர்களை வீசிய நிலையில் அதில் விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றாமல் 48 ரன்களை வழங்கி இருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தற்போது சிறப்பான ஃபர்மில் இல்லை என்றும், இதனால் எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் தன் என்றும் இந்திய அணியின் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.