
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மெகா ஏலத்திற்கு பங்கேற்கும் 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. அந்தவகையில், இந்த ஏலத்தில் பங்கேற்கும் 574 வீரர்களில் 366 பேர் இந்திய வீரர்கள். 208 (3 அசோசியேட் நாடுகளின் வீரர்கள் உள்பட) வெளிநாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.