
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். சிஎஸ்கே தரப்பில் கலீல் அஹ்மத் முதல் ஓவரை வீசினார்.
அந்த ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 4 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன்கள் ஏதுமின்றி ஷிவம் தூபே கையில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் ஆவுட்டான வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல ஆகியோரின் சதனையை சமன்செய்து முதலிடத்தை பிடித்துள்ளார்.