
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியானது பலப்பரீட்சை நடத்தியது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கர்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் சுனில் நரைனுடன் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
ஒருகட்டத்திற்கு மேல் சுனில் நரைனும் பவுண்டரிகளை விளாச, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே 25 பந்துகளில் தனது அரைசத்ததைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்திருந்த அஜிங்கியா ரஹானேவும் தனது விக்கெட்டை இழந்தார்.