ஐபிஎல் 2025: ஜோஷ் ஹேசில்வுட் அபாரம்; பெங்களூருவில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தர்.
Also Read
பின்னர் விராட் கோலியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல்லும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் விராட் கோலி 32 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ய, அவரைத்தொடர்ந்த் தேவ்தத் படிக்கல்லும் 26 பந்துகளில் தனது அரைசததைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், விராட் கோலி 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 70 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, தேவ்தத் படிக்கல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதாரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டிம் டேவிட் - ஜித்தேஷ் சர்மா இணை அணியை வலுவான ஸ்கோரை நோக்கி அழைத்துச் என்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இன்னிங்ஸின் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நிதீஷ் ரானாவும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது.
அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக்கும் அதிரடியாக விளையாடிய நிலையில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிதீஷ் ரானாவும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த துருவ் ஜூரெல் மற்றும் ஷுபம் தூபே இணை அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசி அணிக்கு நம்பிக்கை அளித்தனர். அந்த சமயத்தில் அதிரடியாக விளையாடி வந்த துருவ் ஜூரெல் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோஃப்ரா ஆர்ச்சரும் முதல் பந்திலேயே விக்கெட்டையும் இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
இதனால் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் வெற்றிபெற 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஓவரின் முதல் பந்திலேயே 12 ரன்களைச் சேர்த்திருந்த ஷுபம் தோபே விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து வநிந்து ஹசரங்காவும் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலிலும் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இத்தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.
Win Big, Make Your Cricket Tales Now