ஐபிஎல் 2025: ஹர்திக், திலக் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலானா ஆர்சிபி அணி பலப்பரீட்சை நடத்தியது.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியுடன் தொடங்கிய பில் சால்ட் இரண்டாவது பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த தேவ்தத் படிக்கலும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கொரும் மளமளவென உயர்த்தொடங்கியது.
Trending
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரஜத் பட்டிதாரும் அதிரடியில் மிரட்ட ஸ்கோரும் உயர்ந்தது. பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 67 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரஜத் பட்டிதார் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அவருக்கு துணையாக ஜித்தேஷ் சர்மாவும் பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் எடுத்த கையோடு ரஜத் பட்டிதார் விக்கெட்டை இழந்தார்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டனும் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த வில் ஜேக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணை நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். அதன்பின் வில் ஜேக்ஸ் 22 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 28 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 97 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் இருந்தே சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவருக்கு துணையாக திலக் வர்மாவ்வும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த திலக் வர்மா 26 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தியதுடன், இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த திலக் வர்மா 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 56 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 15 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்களைச் சேர்த்த கையோடு ஹர்திக் பாண்டியாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய நமன் தீர் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோரும் அதிரடியாக விளையாட, கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆர்சிபி அணி தரப்பில் கடைசி ஓவரை குர்னால் பாண்டியா வீசிய நிலையில், முதல் பந்திலேயே சான்ட்னர் தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு இறுதிவரை போராடிய நமன் தீரும் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, மும்பை அணியின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குர்னால் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now