
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதேசமயம் மற்ற அணிகளும் தங்களுடைய போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர்.
முன்னதாக வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுடையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கியது. அதன்பின் நடைபெற்று முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க பல்வேறு அணிகள் போட்டி போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரூ. 26.75 கோடிக்கு அவரை வாங்கியதுடன், அணியின் கேப்டனகாவும் நியமித்துள்ளது.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மார்ச் 25ஆம் தேதி விளையாடவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி முழுமையாக தயாராகி உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.