ஐபிஎல் 2024 மினி ஏலம்: விறுவிறுப்பாக தொடங்கிய ஏலம்; டிராவிஸ் ஹெட்டை வாங்கியது ஹைதராபாத்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 10 அணிகளில் வெறும் 77 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும் நிலையில் அதை பிடிப்பதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 333 வீரர்கள் இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தொடங்கிய இந்த ஏலத்தில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் டி20 கேப்டன் ரோமன் பவல் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு வந்தார். அவரை டெல்லியுடன் போட்டியிட்டு ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி ரூ 7.40 கோடிக்கு வாங்கியது. இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவின் ரூசோவ் அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு வந்தார். அவரை எந்த அணிகளும் வாங்கவில்லை.
Trending
அதேபோல் இந்தியாவின் கருண் நாயர், மனிஷ் பாண்டே மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் ஆகியோரையும் வாங்கவில்லை. கடந்த ஏலத்தில் 13 1/2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இங்கிலாந்தின் ஹாரி புரூக்கை வாங்க டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டியிட்டன. முடிவில் டெல்லி அணி 4 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது.
இதற்கு நடுவில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் தனது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு வந்தார். இவரை ஆரம்பத்தில் வாங்க எந்த அணிகளும் போட்டியிடவில்லை. இறுதி நேரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கையை உயர்த்தியது. உடனே யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் களத்திற்கு வந்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையே ஹெட்டை கைப்பற்ற போட்டி நடந்தது.
இறுதியாக இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6.80 கோடி ரூபாய்க்கு ஹெட்டை வாங்கியது. ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் டேனியல் வெட்டேரி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now