
2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. 2011ஆம் ஆணடுக்குப் பிறகு உலகக் கோப்பையை 3ஆவது முறையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், உலகக் கோப்பைக்கே தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. மேலும். இந்திய அணியின் பும்ரா, கேஎல்ராகுல், ஸ்ரேயஸ் அய்யர், பிரஷித் கிருஷ்ணா உள்ளிட்டோர் காயமடைந்து அணிக்குத் தேர்வில் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளது. இந்நிலையில், கபில் தேவ் மனம் திறந்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 114 ரன்கள் இலக்கை விரட்டும்போது 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. 2ஆவது ஒருநாள் போட்டியில் தோற்றே போனது. இந்நிலையில், இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் காயங்களைக் கையாள்வதில் சோடை போயுள்ளதாக கபில் தேவ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை. அவர் மீது நாம் அனாவசியமாக கால விரயம் செய்கிறோம் என்றே பொருள். ரிஷப் பந்த் காயமடைந்ததால் நம் டெஸ்ட் கிரிக்கெட்டும் சற்றே பின்னடைவு கண்டுள்ளது, ரிஷப் பந்த் ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டர். நான் காயமடையாமல் ஆடினேன் என்று சொல்வதற்கில்லை.