
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. அதன்படி இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா மற்றும் ஆயுஷ் மத்ரே இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்திக் தோமரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஆயுஷ் மத்ரே 19 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் மும்பை அணி 37 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.