
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது சர்ஃப்ராஸ் கானின் இரட்டை சதத்தின் மூலமும், அஜிங்கியா ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 537 ரன்களைக் குவித்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்ஃப்ராஸ் கான் 25 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 223 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேசமயம் அஜிங்கியா ரஹானே 97 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களையும் சேர்த்தனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.