
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. அந்தவகையில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸை வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி மற்றும் பிரின்ஸ் மஸ்வாரே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்லார்ட் கும்பி 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த பிரின்ஸ் மஸ்வாரே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய தியான் மேயர்ஸ் 10 ரன்களுக்கும், கேப்டன் கிரேய்க் எர்வின் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த பிரின்ஸ் மஸ்வாரேவும் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் சீன் வில்லியம்ஸ் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 35 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரையன் பென்னட் 8 ரன்களிலும், கிளைவ் மடாண்டே ரன்கள் ஏதுமின்றியும், பிளெஸிங் முசரபானி 4 ரன்களுக்கும், ரிச்சர்ட் ந்ங்வாரா 5 ரன்களிலும், டெண்டாய் சடாரா ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக ஜிம்பாப்வே அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.