
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பால் ஸ்டிர்லிங் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேட் கார்மைக்கேல் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார் பின்னர் பால்பிர்னியுடன் ஜோடி சேர்ந்த ஹாரி டெக்டரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆண்ட்ரூ பால்பிர்னி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 9ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அதேசமயம் ஹாரி டெக்டரும் தனது அரைசதத்தை பதிவுசெய்ய, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 98 ரன்களை எட்டியது. அதன்பின் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆண்ட்ரூ பால்பிர்னி தனது விக்கெட்டை இழந்தார்.