
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அயர்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு இப்போட்டியில் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஹைர்ஸ் 9 ரன்களுக்கும், ஜார்ஜ் முன்ஸி 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மைக்கேல் ஜோஸ் 23 ரன்களிலும், கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 64 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து இணைந்த மேத்யூ கிராஸ் மற்றும் மைக்கேல் லீஸ்க் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் 35 ரன்கள் எடுத்த நிலையில் மேத்யூ கிராஸும், 34 ரன்கள் எடுத்த நிலையில் மைக்கேல் லீஸ்க்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் மற்றும் கிரேய்க் யங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.