
இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணைகளும் வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய மூன்று அணிகளும் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரானது மே 18ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த மூன்று அணிகளும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய அணிகளாக பார்க்கப்படுவதால் இத்தொடர் அந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.