
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம் 74, அப்துல்லா ஷஃபிக் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அஹ்மது 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதைத் துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடியில் ரஹமனுல்லா குர்பாஸ் 65, இப்ராஹிம் ஸத்ரான் 87 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.
அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் ரஹ்மத் ஷா 77 ரன்களும் கேப்டன் ஷாஹிதி 48 ரன்களும் எடுத்து 49 ஓவரில் ஆஃப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து ஆஃப்கானிஸ்தான் சரித்திர சாதனை வெற்றி பெற்றது. மறுபுறம் ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி தலா 1 விக்கெட் எடுத்தும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.