
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் இஷான் கிஷன். கடந்தாண்டு வரை இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்த இஷான் கிஷான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் இஷான் கிஷனை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாக இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இவர்கள் இருவரும் புறக்கணிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த புஜ்ஜிபாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். அதன்பிறபு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்தியா டி அணியில் இடம்பிடித்திருந்த இஷான் கிஷான் சதமடித்து தனது கம்பேக்கை நிரூபித்தார். மேற்கொண்டு இரானி கோப்பை தொடருக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியிலும் இடம்பிடித்த அவர் முதல் இன்னிங்ஸில் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.