
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் தொடரின் இறுதி போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்த இந்தியா முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. குறிப்பாக கடந்த தொடரில் விராட் கோலி தலைமையில் அசத்திய போதிலும் இறுதிப்போட்டியில் வழக்கம் போல நியூசிலாந்திடம் சொதப்பி நழுவ விட்ட கோப்பையை இம்முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா போராட உள்ளது.
அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட நட்சத்திர வீரர் அஜிங்கிய ரஹானே சமீபத்திய ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்தும், 2023 ஐபிஎல் தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் சென்னை அணியில் சரவெடியாக விளையாடி வித்தியாசமான ஷாட்களை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பினார். அதனால் ஏற்கனவே இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அனுபவத்தை கொண்ட அவர் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா கடந்த ஜூலை மாதம் சந்தித்த காயத்திலிருந்து 3 முறை குணமடைந்து மீண்டும் காயமடைந்து இந்த போட்டியிலிருந்தும் வெளியேறினார். அதை விட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக தோனியை மிஞ்சி சாதனை படைத்த ரிஷப் பந்த்தும் காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் நிலைமையை சமாளிக்க ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் தொடக்க வீரராக சதமடித்த அனுபவம் கொண்ட கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.