
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதேசமயம் கடந்த இரண்டு போட்டிகளாக பேட்டிங் சோபிக்க தவறிய இளம் வீரர் ராஜ்த் பட்டிதாருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கேப்டன் ரோஹித் சர்மா, அஸ்வின் குறித்தும், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.