
ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித், இஷான், ஸ்ரேயாஸ் ஆகிய 3 வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 2-3 என்ற மோசமான துவக்கத்தை பெற்றதால் தோல்வி உறுதியென ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்திய விராட் கோலி 85 ரன்களும், கேஎல் ராகுல் 97 ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அதில் கேட்ச் அதிர்ஷ்டத்தால் அசத்திய விராட் கோலியை விட கொஞ்சம் கூட தடுமாறாமல் சிறப்பாக பேட்டிங் செய்த ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
கர்நாடகவை சேர்ந்த ராகுல் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய போதிலும் 2019க்குப்பின் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தினார். ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சுமாராக செயல்பட்ட அவர் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமானதால் சுயநலமானவர் என்பது உட்பட ஏராளமான கிண்டல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளனர்.