
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட தொடருடன் நட்சத்திர தொடக்க ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக 2024 புத்தாண்டு தினத்தன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 2009இல் அறிமுகமான அவர் 2015 மற்றும் 2023 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். மேலும் கடந்த சில வருடங்களாக ஃபார்மை இழந்து தடுமாறிய போது எழுந்த விமர்சனங்களுக்கு 2021 டி20 உலகக் கோப்பையின் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்த அவர் ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை முத்தமிட உதவினார்.
அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த அதிரடி துவக்க வீரர்களில் ஒருவராக அறியப்படும் அவர் ரசிகர்களின் பாராட்டுகளுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற உள்ளார். அப்படி சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படும் டேவிட் வார்னர் கேரியரில் 2018 பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கு காலத்தால் அழிக்க முடியாத கருப்பு புள்ளியாக அமைந்தது என்றே சொல்லலாம்.