
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று டர்பன் நகரில் தொடங்கியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் பயணத்தின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
அதில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற தொடர்களில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களை அடுத்த தலைமுறை வீரர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடும் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அடுத்த ஃபினிஷராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் ஆழமாக நம்பும் அளவுக்கு தொடர்ந்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்திய டி20 அணியில் இத்தொடர் மட்டுமல்லாமல் வருங்காலங்களில் 6ஆவது இடத்தில் விளையாடுவதற்கு ரிங்கு சிங் மிகவும் பொருத்தமானவர் என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், “ரிங்கு க்ளாஸ் வீரர் என்பதை கடந்த சில மாதங்களாக வெளிப்படுத்திய செயல்பாடுகளால் நீங்கள் அறிய முடியும். இந்தியாவுக்காக அவர் போட்டிகளை ஃபினிஷிங் செய்துள்ளார்.