
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதுமில்லாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெவின் இம்ளச், ஆண்டர்ன் பிலிப் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில், அனுபவ வீரர் கேஎல் ராகுல் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் விக்கெடை இழந்தார். அதன்பின் இணைந்த யஷஸ்வி - சாய் சுதர்ஷன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய சாய் சுதர்ஷனும் அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் இருவருடைய பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களை நெருங்கிய நிலையில், சாய் சுதர்ஷன் 12 பவுண்டரிகளுடன் 87 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.