
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது பிப்ரவரி 12ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்பின் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அந்த அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் நட்சத்திர வீரர்கள் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளனர். அவர்களுடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறித்ததன் காரணமாக இத்தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியானது பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்களுக்கான மாற்று வீரர்களாக பென் டுவார்ஷுயிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.