
உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற 3ஆவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்த கிரீஸை விட்டு வெளியேறியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக பவுலர்கள் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் உடனடியாக நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படும் நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நியாயமா என்ற கருத்துடன் ஐபிஎல் தொடரில் பட்லரை மன்கட் செய்த அஸ்வின் உலகின் அனைத்து பவுலர்களும் அதை செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.
அதில் நியாயமும் இருந்ததால் கிரிக்கெட் விதிமுறைகள் நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி வெளியிட்ட அறிவிப்பை சமீபத்தில் ஐசிசியும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக கடுமையாக விமர்சித்தனர்.
அதற்கு அதிக பவுண்டரிகளை அடித்தோம் என்ற விதிமுறையை காட்டி தோற்காத நியூசிலாந்தை ஏமாற்றி 2019 உலகக்கோப்பை வென்றதை விட தீப்தி சர்மா செய்தது மோசமில்லை என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். முன்னதாக அப்போட்டியில் பந்து வீச வேண்டும் என்பதைவிட ரன் அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தீப்தி செயல்பட்டதாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் விமர்சித்திருந்தார். அதிலிருந்து பின்வாங்காத அவர் ஒரு பவுலராக பேட்ஸ்மேன்கள் அவ்வாறு செய்வதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.