
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும், ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஹ்சன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ரிஷப் பந்த் 39 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், கேஎல் ராகுல் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரவீந்திர ஜடேஜா 86 ரன்களில் விக்கெட்டை இழக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.