
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சாம் கொன்ஸ்டாஸ் இந்த இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறினார்.
அதன்பின் இந்த இன்னிங்ஸில் சாம் கோன்ஸ்டாஸ் 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். முதல் இன்னிங்ஸில் பும்ராவுக்கு எதிராக மட்டும் 33 ரன்களை சாம் கொன்ஸ்டாஸ் குவித்திருந்த நிலையில், இந்த இன்னிங்ஸில் அதற்கு பும்ரா பழித்தீர்த்துக் கொண்டதுடன் விக்கெட்டை வீழ்த்திய கையோடு ஆக்ரோஷமாக கொண்டாடவும் தொடங்கினார்.