
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் லபுஷாக்னே 2 ரன்னிலும், சாம் கொன்ஸ்டாஸ் 23 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும் என நடையைக் கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - பியூ வெப்ஸ்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மிட்டனர். இதில் ஸ்மித் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அலெக்ஸ் கேரியும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பியூ வெப்ஸ்டர் தனது அறிமுக போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்து வருகிறார்.