
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபாரமான சதத்தின் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை குவித்தள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 18 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட்டும் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் இணை ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டமிழந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.