
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதிலும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் தொடரையும் 2-0 என இழந்தது. இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 01ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஏனெனில் நடப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 3.09 என்ற எகானமியில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.