
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று கெபெர்ஹாவில் நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் அந்த அணி 53 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஈதன் போஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரைலீ ரூஸோவ் ரன்கள் ஏதுமின்றியும், கைல் வெர்ரைன் 11 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.