
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதனத்தில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜித்தேஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் போது லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் செய்த செயல் ஒன்று பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
அதன்படி இப்போட்டியில் ஆர்சிபி இன்னிங்ஸின் போது 17ஆவது ஓவரை லக்னோ வீரர் திக்வேஷ் ரதி வீசிய நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தை மயங்க் அகர்வால் எதிர்கொள்ள இருந்தார். அப்போது பந்துவீச வந்த திக்வேஷ் ரதி நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த ஜித்தேஷ் சர்ம க்ரீஸை விட்டு நகர்வதை கணித்து தனது பந்துவீச்சை நிறுத்தியதுடன் ரன் அவுட்டும் செய்தார். இதையடுத்து கள நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் மேல்முறையிட்டனர்.