ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு என ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டிற்கான ரைஸிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் கத்தாரில் நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டவுள்ளது.
இதில் குருப் ஏ பிரிவில் ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் மற்றும் இலங்கை அணியிலும், குரூப் பி பிரிவில் இந்தியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இதில் இந்திய அணி நவம்பர் 14ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. அதேசமயம் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நவமபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நமன் தீர் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஷ் ஆர்யா, நெஹால் வதேரா, சுயாஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, யாஷ் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.