
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 282 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேய்க் பிராத்வைட் 61 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது 31 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்த, அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை நோக்கி விளையாடி வருகிறது.