நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்களையும், ஒல்லி போப் 66 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அந்த அணி ரன்களைச் சேர்க்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 155 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. பென் டக்கெட் 92 ரன்னும், பெத்தேல் 96 ரன்னும் எடுத்தனர். ஹாரி புரூக் 55 ரன்னில் வெளியேறினார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். இது இவரது 36வது சதமாகும். ஜோ ரூட் 106 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.