
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத், அகா சல்மான் மற்றும் அப்துல்லா ஷஃபிக் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
பின்னார் நேற்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஸாக் கிரௌலி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.