இந்திய டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 12ஆம் தேதி லீட்ஸீல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மீண்டும் ஒரு முறை இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்சமயம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்களைக் குவித்து வரும் ஜோ ரூட் இந்த தொடரிலும் அதனை தொடர்வாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேசமயம் இந்த டெஸ்ட் தொடரின் போது ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்புகளையும் பெற்றுள்ளார். அதுகுறித்து பார்ப்போம்.,
இந்தியாவுக்கு எதிராக 3000 ரன்கள்
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் 154 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், இந்திய அணிக்கு எதிராக 3000 டெஸ்ட் ரன்களைப் பதிவுசெய்வார். இதன்மூலம் இந்த மைல் கல்லை எட்டிய உலகின் முதல் வீர்ர் எனும் சாதனையையும் ஜோ ரூட் படைப்பார். ஜோ ரூட் இதுவரை இந்தியாவுக்கு எதிராக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 2846 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள்
இது மட்டுமல்லாமல், ரூட் இந்தியாவுக்கு எதிராக 10 டெஸ்ட் சதங்களையும் அடித்துள்ளார். இந்தத் தொடரில் அவர் இன்னும் இரண்டு சதங்கள் அடிக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். தற்போது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக 11 சதங்களை அடித்து அந்த சாதனையை தனது பெயரில் வைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6000 ரன்கள்
மேற்கொண்டு இந்த டெஸ்ட் தொடரில் ரூட் 457 ரன்களை எடுக்கும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 6000 ரன்களை எட்டுவார். இதனை எட்டும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் 6ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைப்பார். தற்போது ஜோ ரூட் 64 போட்டிகளில் விளையாடி 117 இன்னிங்ஸ்களில் 18 சதங்கள், 21 அரைசதங்களுடன் 5543 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக ரன்கள்
Also Read: LIVE Cricket Score
இதுதவிர இந்த டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் மற்றொரு வரலாற்று சாதனையை படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இந்த தொடரில் ரூட் 373 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடிப்பார். தற்சமயம் ரிக்கி பாண்டிங் 13378 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், ஜோ ரூட் 13006 ரன்களுடன் 5ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now