
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், பென் டக்கெட் 40 ரன்களிலும், ஹாரி புரூக் 33 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியில் நான்காம் வரிசையில் களமிறங்கிய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். இந்நிலையில் இப்போட்டியில் ஜோ ரூக் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை தகர்த்துள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் ஜோ ரூட் அரைசதம் அடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக 50பிளஸ் ஸ்கோரை அடித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலை பின்னுக்கு தள்ளி 5ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் ஷிவ்நரைன் சந்தர்பால் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் இருவரும் கூட்டாக தலா 96 அரைசதங்களை விளாசி ஐந்தாவது இடத்தை பகிர்ந்து வந்த நிலையில், தற்போது 97 அரைசதங்களை கடந்து ஜோ ரூ 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.