
இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நாளடைவில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். குறிப்பாக 90களில் அவர் அடித்தால் தான் இந்தியா வெல்லும் என்ற நிலைமையில் பெரும்பாலான போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றிய அவர் 24 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையை தன் தோள் மீது சுமந்து 2011 உலகக்கோப்பை உட்பட ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை முதல் முறையாக அடித்து 1 சதம் அடிப்பதற்கே திண்டாடும் வீரர்களுக்கு மத்தியில் 100 சதங்களை விளாசிய அவர் ஏராளமான உலக சாதனைகளை படைத்துள்ளதால் இந்தியாவில் கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அப்படிப்பட்ட அவரை ஜாம்பவான்களாக போற்றப்படும் எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் முதல் ஏராளமான இளம் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை தங்களது ரோல் மாடலாக பின்பற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் தாம் பிறக்காத காலத்திலேயே அறிமுகமாகி தாம் விளையாடிய காலத்திலும் எதிரணியில் விளையாடும் அளவுக்கு 20 வருடங்களுக்கு மேலாக காலத்தை கடந்து விளையாடிய சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிள்ளதாக மனதார பாராட்டியுள்ளார். கடந்த 2012இல் அறிமுகமாகி இங்கிலாந்தின் நம்பிக்கை நாயகனாக அவதரித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை அதிவேகமாக அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் ஏற்கனவே தகர்த்துள்ளார்.